வியாழன், 5 ஆகஸ்ட், 2010

காதல் இனிமையானதுதான் அதை மறுப்பதற்கில்லை... இளவயது காதல் எதனால் உண்டாகிறது?


காதல் புனிதமானது அது எந்த சூழ்நிலையிலும் எந்த வயதிலும் வரக்கூடிய ஒரு மெல்லிய உணர்வு. இன்று நம்மில் பலர் தவறாக எண்ணிக் கொண்டுள்ளோம். இளம்வயதில் அதாவது படிக்கும் பருவமான டீன்ஏஜ் பருவத்தில் வருவதுதான் காதல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காதல் உயிரின் ஜனனம் முதல் மரணம்வரை தொடரும். காதல் என்பது ஒரு உயிர் உருவாவதற்கு முன்னரே காதல் வந்துவிடுகிறது.

உதாரணத்துக்கு ஒரு தாய் தன்வயிற்றில் கரு உண்டான உடனே தன்குழந்தையின் மேல் அதீதபாசம் கொண்டுவிடுகிறாள். பெற்றோர்கள் தன் குழந்தையை நேசித்து அப்பொழுதே காதலாகி கனவுகாண தொடங்கிவிடுகிறார்கள். பெற்றோர் தன் குழந்தையின்மீது உண்டான பாசமும் காதல்தான். பிள்ளை பெற்றோரின்மேல் கொண்ட பாசமும் காதல்தான். இப்படி எதுஎதன் மேல் அன்பு செலுத்துகிறோமோ அதெல்லாம் காதல் தான்.

காதலில் அன்பு, பாசம், நேசம், ஆசை, விருப்பம் இதெல்லாம் அடங்கிவிடுகிறது. நம்மவர்கள் இளம்வயதில் வருவதுதான் காதல் என்று காதலை கொச்சைப்படுத்துகிறார்கள். இளவயது காதல் எதனால் உண்டாகிறது என்றால் பையனோ பெண்ணோ தன்னுடன் படிக்கும் அல்லது தன்னுடன் பணிபுரிபவர்களிடமோ வருகிறகாதல். ஒருவர்மேல் ஒருவர் ஈர்க்கப்பட்டு அவர்களின் செயல்பாடுகள் கவரும்படியாக அமைந்துவிட்டால் அங்கே இருவருக்கும் காதல் உருவாகிவிடுகிறது. அவன்/அவள் செய்யும் சின்னசின்ன நடவடிக்கைப் பிடித்துபோய் இவர்கள்தான் நம்மீது உண்மையான அன்பு செலுத்துகிறான்/ செலுத்துகிறாள் என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது.

இருவரின் மனங்களும் ஒத்துப்போய் அன்பு செலுத்துவதினால் காதல் ஏற்பட்டுவிடுகிறது. இதனால்தான் இன்று நிறைய காதல் திருமணங்கள் பெருகிவருகின்றன. இதற்கு இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் காதல் திருமணங்களை அங்கீகரிப்பதில்லை. தாங்கள் இருபது வருடங்களாக தங்கள் பிள்ளைகள் பொத்திபொத்தி வளர்த்தபின் எங்கிருந்தோ வந்த முன்பின் பழக்கமில்லாத இன்னொருவனுடன்/இன்னொருவளுடன் காதல் என்றுவரும்போது மனம் ஏற்கமறுக்கிறது. எங்கே தங்கள் பிள்ளைகள் வழிமாறி சென்று வாழ்க்கையில் கஷ்டப்படுவார்கள் என்ற கவலையில்தான் பெற்றோர்கள் காதலை ஏற்கமறுக்கிறார்கள். இதுதான் உண்மை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்மீதான கனவில் களங்கம் வரும்போது அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. மனம் வேதனைப்படுகிறது. ஆனால் காதலர்கள் இதை அலட்சியம் செய்து பெற்றோர்களின் மனதை புரிந்துகொள்வதில்லை. சிறிது காலம் சென்றபின் காதல்வாழ்க்கை கசந்தபின் திரும்பிவரும்போது பெற்றோர்கள் மன்னித்து சந்தோசத்துடன் அவர்களை ஏற்றுக்கொளும்போது இழந்ததை மீட்ட சந்தோசம் வந்துவிடுகிறது.

இந்தமாதிரி சூழ்நிலையை தவிர்க்க பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்கிறார்கள். இதையும் மீறி பிள்ளைகள் தவறான வழியில் சென்றுவிடுகிறார்கள். இதுமாதிரி நடக்காமலிருக்க பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உண்மைநிலையை தெளிவாக விளக்கவேண்டும். ஒரு நல்ல நண்பனைப்போல அவர்களோடு மனம்விட்டு பேசவேண்டும். இதெல்லாம் இப்போது சரியாகத் தோன்றும்; பின்னால் இப்படி நடந்தற்காக நாம் நிறைய வருத்தப்படவேண்டி வரும் என்று புரியவைக்க வேண்டும். அப்போதுதான் வழி தவறமாட்டார்கள். பிள்ளைகளும் நம் வாழ்க்கைக்கு தேவையானதை நிதானமாக சிந்தித்து சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதனால்தான் இளம்வயதில் வ‌ரும் காதலை வேண்டா வெறுப்பாக எல்லோரும் நினைக்கிறார்கள். திருமணத்துக்கு பின் வரும் காதல் என்றென்றும் அழியாதது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கை ரொம்ப அர்த்தமுள்ளதாகும். காதல் நமக்குள் வரும்போது சாதிமத பேதங்கள் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிடும். அன்பால் எதையும் சாதிக்கலாம். வன்முறைகள் எதுவும் நடக்காது. இது தெரியாமல் ஒவ்வொருகொருவர் சண்டையிட்டு மடிகிறார்கள். இந்த உலகில் காதலிக்காதவர்கள் இருக்கவே முடியாது. மனிதர்களுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு உயிருக்கும் காத‌ல் உண்டு.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

காதலால் தவறான பாதையில் மனம் செல்லாது. காதல் நியூட்ட‌னின் முதல் விதியைப் போல..

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றமுடியும்.

இதுபோலதான் காத‌லும். காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக