தாய்-மகள், தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, தொழிலாளி-முதலாளி என்று எல்லா உறவுகளிலும் நட்பே வேண்டும். சக தொழிலார்களிடம் நட்பு பிற மொழியினரிடம் நட்பு பிற நாட்டவரிடம் நட்பு என்று அனைத்திலும் நட்பு இருந்தால்தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும்.
நட்பு என்பது ரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை அதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். நண்பர்களாய் இருந்த இருவர் ரத்த உறவுச் சகோதரர்களாய் ஆவதில்லை. ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அதுதான் அவர்களின் சகோதர உறவையும் நெடுநாளையதாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.
ஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவர்கள் அல்ல. அவர்களுக்கு இரு வழிகளில் நட்பு வர வழியிருக்கிறது. காதலர்களாய் ஆனபின் அல்லது கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஆகலாம். எப்படியாயினும் உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய் இருப்பது நட்புதான்.
ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே உறவாக இருந்தால், அதில் அவ்வப்போது விரிசல்தான் விழும். இருவருக்கும் இடையில் நட்பு என்பது உறவாக இருந்தால், அவர்களை அசைக்க எவராலும் இயலாது.
காதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக் காதல் நாலு நாளில் செத்துப் போகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தை உருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும் உயரத்திலேயே இருக்கும்.
வாழ்வின் அனைத்திற்கும் நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.
இரு தலைவர்களுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும். இரு மதத்துக்குள் நட்பு என்றால் அப்பப்பா... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்
நட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை! காதல் வந்ததும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம்! காதல்கூட நட்பை இழக்கச் செய்வதில்லை. கல்யாணம்தான் அதைச் சிலரிடம் செய்துவிடுகிறது. கணவன் மனைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இழந்துவிடுகிறார்கள் சிலர். அத்தனை பலகீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்கிறது என்றால் அது உண்மையான நட்பா? உண்மையான நட்பிருந்தால் உயிர் போகும்போதும் உறவு போகாது!
எல்லோரும் ”நல்ல நட்புடைய” நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும் தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக