வியாழன், 10 ஜூன், 2010

காதல் நட்புதான்

சுரக்காத மார் சுரந்து
உனக்காகப் பாலூட்ட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

மடியில் அள்ளிவைத்துச்
சோறூட்டிச் சீராட்ட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

காலை எழுந்ததும்
உன் தலைகோதி நான் மயங்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

சிணுங்கிச் சிணுங்கி உன்னோடு
பொழுதெலாம் விளையாட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

எண்ணி முடியாமல்
ஈரம் குறையாத இதழ் முத்தமிட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

இடைவெளியும் இடைவலியும்
இல்லாமல் கட்டித்தழுவ
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

விட்டுப் பிரியாமலும்
தொட்டு அகலாமலும்
மூச்சோடு மூச்சாகி சுவாசிக்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

உயிரோடு உயிர்வைத்து
ஓருயிராய் உருகி ஒன்றாக
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

172

ஏனோ இப்படி
என் இதயத்தின் சந்துகளில்
நடையாய் நடக்கிறாய்
உனக்குக் கால்கள் வலிப்பதில்லையா

ஏனோ இப்படி
என் தூக்கத்தை தூக்கிச்சென்று
காலுக்கிடையில் வைத்துக்கொண்டு
மௌன மரக்கிளையில்
பாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறாய்

யார் நீ
என் பைத்தியம் தீர்க்க வந்தவளா
பைத்தியம் ஆக்க வந்தவளா
என் தாக விழிகளுக்குள்
உறக்கத்தைக் கொட்ட வந்தாயா
கொரிக்க வந்தாயா

சொல்
உன் கண்களின் தீபம்
எப்படி என்னை மெழுகுவத்தியாக்கி
இப்படி உருக்கி எடுக்கிறது

காதலிக்கிறேன் உன்னை
எப்போதும்

173

அப்படி என்னதான் இப்படி
ஓயாமல் பேசிக்கொண்டே
இருக்கிறாய்

கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
அலுக்கவே இல்லை
என்ன கேட்டேன் என்றுதான்
தெரியவே இல்லை

பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
சலிக்கவே இல்லை
என்ன பார்த்தேன் என்றுதான்
புரியவே இல்லை

செவி அறியாமல் நீ பேசும் ஒலி
என் இதயக் கூட்டுக்குள்
சங்கீதம்

விழியறியாமல் நீ வீசும் ஒளி
என் உள் வானத்தில்
விடியல்

உன் சங்கீதம் சாய்ந்தால்
என் இதயம் ஓயும்
உன் விடியல் தாமதித்தால்
என் உயிர் தவறும்

உன் புகைப்படம் கண்ட
சிறுபொழுதில் இப்படி உளறினால்
உன்னை நேரில் கண்டு
நான் என்னாவேன்

174

காற்று பெண்
நெருப்பு ஆண்

துணையோடு எரியும்
துணைகேட்டு எரியும் நெருப்பு
தூண்டித் தூண்டிவிடும்
தூண்டப்பட்டு அலையும் காற்று

நிலம் பெண்
நீர் ஆண்

நிலத்தடி தேடியே நீர் பாயும்
நெருப்பிதழ் தீண்டி காற்றுத் தோள் பற்றி
ஆகாய மடிகளில் உறங்கிப்போனாலும்
நீர் ஆசையாய் ஓடிவரும்
நிலமே நிலமே என்று

நீர் வேண்டியே
நிலம் வெடித்துக் கிடக்கும்
நீரைக் கலந்தே உயிர்கள் ஈனும்

ஆகாயம் என்பதோ
ஆணும் பெண்ணும் இணைந்த
முழுமை

ஒன்றே ஒன்றென ஒன்றிக் கலந்ததில்
ஈடில்லா அமைதி
இடரில்லா நிம்மதி
உயிர் பூத்த
உச்சம்

175

பூவைப் பறித்துவிட்டால்
மீண்டும் காம்பில் இட முடியாதுதான்
ஆனால் நெருப்பைப் பறித்துவிட்டால்
மீண்டும் தீபத்தில் இட்டுவிடலாமே

சிசுவைப் பிரித்துவிட்டால்
மீண்டும் கர்ப்பத்தில் சேராதுதான்
ஆனால் நீரைப் பிரித்துவிட்டால்
மீண்டும் சேர்ந்துவிடுமே

முடியைப் பிடுங்கி நட்டால்
அது வளர வழியில்லைதான்
ஆனால் நாற்றைப் பிடுங்கி நட்டால்
இன்னும் செழித்து வளருமே

வெள்ளி விழுந்துவிட்டால்
மீண்டும் வானம் ஏறாதுதான்
ஆனால் சூரியன் விழுந்துவிட்டால்
மீண்டும் விடியலில் வானேறுமே

விதையைக் கிள்ளிவிட்டால்
அது மரமாய் வளராதுதான்
ஆனால் காதலைக் கிள்ளிவிட்டால்
அது மீண்டும் துளிர்த்துவிடுமே

176

நட்பைத் தவிர்க்கலாம்
காதலைத் தவிர்க்க இயலாது
புன்னகைப்பதைத் தடுத்தாலும்
பூப்பூப்பதைத் தடுப்பதியலுமா

காதல் காமம்தான் என்றால்
சில நூறு டாலர்கள் போதும்
அதைச் சமாளிக்க

காதல் நட்புதான் என்றால்
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கும் ஆணும்
தேவையே இல்லை

காதல் அன்புதான் என்றால்
ஓராயிரம் குழந்தைகள் உண்டு
அதை அள்ளித்தர

காதல் ஈர்ப்புதான் என்றால்
இயற்கையும் கலைகளும் போதும்

காதல் ஆறுதல்தான் என்றால்
தாய்மடியும் இலக்கியங்களும் போதும்

காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்

177

பார்வைகளால் கீறிக்கீறி
காதலைச் சொல்வார்கள் சில பெண்கள்
புன்னகையால் சிறைபிடித்து
காதலைச் சொல்வார்கள் சில பெண்கள்

இப்படியாய்
கடிதங்களால்
கால்விரல் கோலங்களால்
கவிதைகளால்
கவர்ச்சி அபிநயங்களால்
காதலைச் சொல்வார்கள்
உலகெங்கிலும் பெண்கள்

நெகிழ்ந்து நெகிழ்ந்து
ஏங்கங்களைச் சுமந்து சுமந்து
உயிரின் செல்களைக் கரைத்து கரைத்து
கன்னங்களில் உருண்டு பேசும்
விழிமணிகளால்
விழிமணிகளின் உப்புப் பூக்களால்
அன்பை நேசத்தை பரிவை பாசத்தை
கருணையை காதலைச்
சொன்ன நூதனமே

உனக்கு நான் யாரென்று
அறிவதில் அக்கறையில்லை எனக்கு
ஆனால் எனக்கு நீதான்
நீ மட்டும்தான் எல்லாமானவள்

178

உன் மனதின் மௌனத்தைப்
பதிவு செய்துகொண்டே
முன்னேறுகிறேன் நான்

பின்னொருநாள்
எளிதாகச் சொல்லிவிடுகிறாய்
நான் அப்படி
நினைக்கவே இல்லையே என்று

உன் மனம் என்னிடம் மொழிந்ததைத்
தெளிவாகக் கேட்டேனே என்று வாதிடுவது
எனக்கே மடத்தனமாய்த் தோன்றுகிறது

எனக்கும் அந்தச் சாதுர்யத்தைக்
கற்றுத்தந்துவிடாதே கிளியே
மனதோடு மனதாக மட்டுமே
இழைய விழைகிறேன் நான் உன்னுடன்

உன் செடிகளின் நிஜமான பூக்களில்
தொட்டுத் துடித்துச் சிறகசைப்பதே
என் வண்ணத்துப் பூச்சிகள்

அதற்கு உன் மௌனமே போதும்
பேசுகிறேனென்று பொய்கள் வேண்டாம்

179

நாவடியில் வைத்து என்னை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல் தத்தளிக்கிறாய்

குறுதி கொப்பளிக்கும் என் உயிர்
உன் அவதிகள் கண்டு செத்து மடிகிறது

சோதனையாய் ஒன்றுசெய்
என்மீது கண்ணீர் பொழியும்
உன் விழிகளை இக்கணமே தடுத்து நிறுத்திக்கொள்

பின்னெல்லாம் உன்முன்
வசந்தங்கள் திறந்துகொண்டால்
என்னை முழுவதும் மறந்து வெகுதூரம் ஓடிப்போ

அன்றி
உன்னிடம் இருப்பவையும்
தொடு தூரத்தில் தழுவக் காத்திருப்பவையும்
மூடிக்கொண்டுவிட்டால்
வா வா என் உயிரே நீ என்னிடமே வந்துவிடு

180

இனி நாம்
சந்திக்கக் கூடாது என்று
நீதானே சொன்னாய்
பிறகு ஏன் ஒரு நாளும் விடாமல்
நீ என் கனவில் வந்து தொலைக்கிறாய்

நான் உறங்கச் செல்லும்போது
நீ என் தலையணைக்குள்
ஒளிந்திருப்பாயா
அல்லது
எப்போதுமே நீ என்
இமைகளின் மேல் மாடியில்தான்
குடியிருக்கிறாயா

இப்படித்தான்
சில காலம் வருவாய்
பின் ஒருநாள் என்னை அழைத்து
இறுக்கமாகக் கட்டிக்கொண்டு
கனவில்கூட இனி நாம் சந்திக்கக்கூடாது
என்று சொல்லிவிட்டு
என் முகத்தை ஏக்கத்தோடு
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே
போயே போய்விடுவாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக