சனி, 12 ஜூன், 2010

காதல் ஒரு போர் போன்றது

அலை அலையாய் அவன் நினைவு வந்து, என் மனமலையில் மோதுகையில் சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன். ஒரு பனி போலக் கரைந்து போகிறேன்.

நினைவுகளின் தொடுகையிலே உயிர்ப்பூக்களைச் சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு அவனுக்கும் எனக்கும் என்ன சொந்தம்? அவனோடு எனக்கென்ன பந்தம?

குளிரிலே இதமான போர்வையாய், வியர்க்கையில் குளிர் தென்றலாய்,
மழையிலே ஒரு குடையாய், வெயிலிலே நிழல் தரு மரமாய், தனிமையில் கூடவே துணையாய், கால்களில் தழுவுகின்ற கடல் அலையாய்..... அவன் நினைவுகள் எப்போதும் என்னோடுதான்.

ஓ... இது தான் காதலா! இது காதலெனும் பந்தத்தில் வந்த சொந்தமா?
எனக்கும் தெரியவில்லை.

வாழ்வில் யார் யாரை எந்தெந்தப் பொழுதுகளில் சந்திக்கப் போகிறோம் என்பதையோ, அவர்களில் யார் யார் எமக்குப் பிடித்தமானவர்களாகி விடப் போகிறார்கள் எனபதையோ எம்மில் யாருமே முற்கூட்டியே அறிந்து வைத்திருப்பது இல்லை. ஏன், எதற்கு, எப்படி என்று தெரியாமலே நாம் சந்திப்பவர்களில் சிலர் மட்டும் எம் நெஞ்சங்களில் பிரத்தியேகமான இடத்தைப் பிடித்து விடுகிறார்கள். அப்படித்தான் இவனும் என்னுள் குடி புகுந்து, என் மனமுகட்டில் அமர்ந்திருக்கிறான்.

இன்றைய பொழுதில் அவன்தான் எல்லாமுமாய் எனக்கு இருக்கிறான். எந்தக் கணத்திலும் அவனை என்னால் மறக்க முடிவதில்லை. அவன் பக்கத்தில் இல்லை என்று சொல்ல முடியாத படி அவன் நினைவுகள் என்னுள்ளே விருட்சமாய் வியாபித்து, பூக்களாய் பூத்துக் குலுங்கி, அழகாய், கனி தரும் இனிமையாய் பிரவாகித்து இருக்கின்றன. எனது அசைவுகள் கூட அவனை மையப் படுத்தியே தொடர்கின்றன. எதைச் செய்தாலும் எங்கோ இருக்கும் அவன் என் பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பது போன்ற உணர்வுகள் கூடி, எப்படியோ எனது வேலைகள் எல்லாமே அவனுக்காகவே செய்யப் படுவன போல ஆகி விடுகின்றன.

இவையெல்லாம், இந்த உணர்வுகள் எல்லாம் எந்தக் கணத்தில் ஆரம்பித்தன என்று தெரியவில்லை. எதேச்சையாகத்தான் நடந்தது என்று சொல்லி விடவும் முடியவில்லை. எப்படி என்றும் தெரியவில்லை. ஆனால் அவன் இல்லாமல் நான் முழுமையாக இல்லை என்பதை மட்டும் ஒவ்வொரு பொழுதிலும் உணர்கிறேன். இது காதல்தானே!

காதல் பொய். அப்படி என்று ஒன்றுமே இல்லை. அது வெறும் பருவக் கோளாறு மட்டுமே என்று பலர் சொல்லக் கேட்டிருந்தாலும் காதல் இனிமையானது என்பதை உணர்ந்துதான் வைத்திருந்தேன். இப்போதுதான் அதன் முழுமையையும் உணர்கிறேன்.

அவன் எப்போதும் என் நினைவுகளில் சுழன்று கொண்டே இருக்கிறான். ஆனாலும் அவனை எப்போதும் ´மிஸ்´ பண்ணிக் கொண்டே இருக்கிறேன். அவனைத் தவிர்த்து வேறெதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை.

காதல் கொண்ட அனைவரும் பிதற்றும் வார்த்தைகள்தானே இவை என்று சொல்கிறீர்களா? அப்படித்தான் சொல்வீர்கள் நீங்களும் காதலில் விழும் வரை.
அதென்ன காதலில் விழுவது, அது என்ன குளமா, கிணறா என்று கேட்கிறீர்களா? அப்படித்தான் முன்னர் நானும் யோசித்திருக்கிறேன்.

எத்தனையோ தடவைகள் என்னருகில் எத்தனையோ பேர் கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே எனக்குத் தெரிந்ததில்லை. ஆனால் இப்பொழுது யாராவது என்னருகில் கட்டியணைத்தாலோ அல்லது கொஞ்சிக் குலாவினாலோ நான் தடுமாறிப் போகிறேன்.

காதல் என்பது உடல்களை விடுத்து உள்ளங்கள் மட்டும் ஸ்பரிசிக்கும் ஒரு இனிய பிணைப்பு என்றுதான் இதுவரை கருதியிருந்தேன். இப்போது அவன் முன் என் கருத்துக்கள் கொஞ்சம் தள்ளாடுகின்றன. அன்பை தழுவி உணர்ந்து கொள்வது போல், இறுக அணைத்து பகிர்ந்து கொள்வது போலக் காதலையும் ஆலிங்கனத்தால் உணர்ந்து கொள்ளலாம், பகிர்ந்து கொள்ளலாம்… என்பதெல்லாம் அவனோடான நேசத்தின் பின்தான் எனக்குப் புரிந்தது. ஒரு பார்வையால், ஒரு சிரிப்பால்… என்று காதலை உணர்த்தலாந்தான். அதே போல ஒரு தொடுகையால், ஒரு அன்பான அணைப்பாலும் கூட காதலை உணர்த்தலாம்.

அவன் நினைவுகள் என்னை எத்தனை தூரம் பரவசப் படுத்துகிறதோ, அதேயளவுக்கு என்னை வளைக்கும் அவன் கரங்கள் என் வரை நீளாதோ என்று ஏங்கவும் வைக்கிறது. என் காதோரம் படர்ந்து என்னைச் சிலிர்க்க வைக்கின்ற அவன் மூச்சுக் காற்றை இந்தக் காற்றுத் தன்னோடு கூட்டி வராதோ என்று மனம் சபலம் கொள்கிறது. ஏகாந்தப் பொழுதுகளிலெல்லாம் மனம் அவனோடு கைகோர்த்து நடக்கிறது. அருவியின் ஓசை அவன் சிரிப்பையும், தென்றலின் தழுவல் அவன் அணைப்பையும், இயற்கையின் தோற்றம் அவன் அழகையும் என்னுள் கவிதைகளாய்த் தெளிக்கின்றன. உதிக்கின்ற கவிதைகளில் எல்லாம் அவன் பிம்பந்தான் உயிர் கொள்கிறது.

முகம் பார்க்காமலே எழுத்தால், குரலால்... என்று ஏதேதோ காரணங்களால் நெஞ்சைத் தொட்டவர்கள் பலர். எத்தனையோ நூறு மின்னஞ்சல்களின் மத்தியில், முகமே தெரியாத ஒருவனின் ஓரிரு வரிகளே இதயச் சுவர்களை வேர்க்க வைக்கிறது. முழுமதியாய் சிரிக்க வைக்கிறது. காற்றுச் சுமந்து வரும் ஒரு குரல் நெஞ்சச் சுவர்களில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அந்த எழுத்துக்களுக்கு அல்லது அந்தக் குரலுக்கு அப்படி என்ன சக்தி இருக்கிறது என்று தெரிவதில்லை. அப்படித்தான் இவனிடமும் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவன் என்னை ஆக்கிரமித்தானா அல்லது நான் அவனுள் என்னைத் தொலைத்தேனா தெரியவில்லை. எதையும் பிரித்தறியவும் முடியவில்லை.

அவனை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சக் கூட்டுக்குள் ஏதோ உருள்வது போன்ற உணர்வு. அந்தரம். தவிப்பு. நினைக்கும் போதெல்லாம் என்றால்.. மறந்தும் போகிறேன் என்றல்லவா அர்த்தம் கொள்ளும். அப்படி அவனை மறப்பதும் இல்லை. எத்தனையோ முக்கியமான விடயங்கள் எல்லாம் மறந்து போகும். அவனை மட்டும் எந்தப் பொழுதிலும் மறக்க முடிவதில்லை. அவன் நினைவுகளே ஆதார சுருதியாய், என்னை ஆகர்ஷிக்கும் பொழுதுகளாய்… அவனில்லாமல் நானில்லை என்ற நிலையில்… படுக்கும் போது கூட அவன் நினைவுகளைத்தான் போர்த்திக் கொண்டு படுக்கிறேன். இது காதல்தானே.

மௌனம் கூட அழகு என்று சொல்வார்கள். நான் கூட பலருக்கும் எனது மௌனத்தையே பதிலாக்கி இருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் மௌனத்தை என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. விழி பேசும் போது மொழி தேவையில்லைத்தான். பார்க்கவே முடியாத தூரத்தில் மௌனம் எப்படி அழகாக இருக்கும்? அவன் மௌனமாய் இருக்கும் பொழுதிலெல்லாம், பிரபஞ்சம் பிரமாண்டமாய் பரந்து விரிந்திருப்பது போலவும், நான் மட்டும் அங்கு தனியாக இருப்பது போலவும் உணர்கிறேன். எங்கே அவன், எந்த அலையிலும் நம் சொந்தம் கலையாது என்று சொன்னவன் இப்போ எங்கே போய் விட்டான், என்று கலங்குகிறேன். மனம் கலைந்து, உடல் களைத்து, சலித்து விம்முகிறேன். சிறு துரும்பின் அசைவில் கூட அவன் மௌனம் என்னில் கண்ணீராய் சிதறி விடக் காத்திருக்கிறது.

மீண்டும் மீண்டுமாய் மின்னஞ்சல் கணக்கைத் திறந்து பார்க்கிறேன். எத்தனையோ வந்திருந்தாலும் அவனது வரவில்லை என்னும் போது மனசு வெறுமையாகி விடுகிறது. அந்த ஒரு சிறிய தாமதமே, ஏன்? எப்படி மறந்தான்? ஒரு மின்னஞ்சல் எழுதக் கூட முடியாமல் என்னை மறந்து விட்டானா? என்ற கேள்விகளை எனனுள் மிகுந்த ஆதங்கத்தோடு அடுக்கத் தொடங்கி விடுகிறது. அந்தப் பொழுதுகளில் எல்லாம் நான் சோகத்தில் துவண்டு போகிறேன். இதயம் இருண்டு போவது போல உணர்கிறேன். கணப் பொழுதுகளும் யுகங்களாய் நீள்கின்றன.

தொலைபேசி அழைப்புக்கள் ஒவ்வொன்றுமே அவன்தான் என்ற நினைப்பில் மின்சாரத் தாக்குதலாய் என்னை அதிர வைக்கின்றன. பின் அவனில்லை என்றானதும் காற்றுப் போன பலூனாய் எல்லா அதிர்வுகளும் கலைந்து போகின்றன. எதையும் செய்ய முடியாமல், உடல் வலுவிழந்தது போலச் சோர்கிறது. மனம் சாப்பிட மறுக்கிறது. அடிக்கடி கண்கள் பனித்துப் பனித்து விழியோரங்களில் வழிகின்றன. குழறி அழுது விடலாம் போலிருக்கிறது. மை கொண்டு எழுதியவை என் மனசு போலக் கண்ணீரில் கரைகின்றன. ஏன் ஏன் இப்படியானது, ஏன் என்னை இப்படிப் பைத்தியமாய் ஆக்கினான், என்று என்னையே கேட்கிறேன். காதல் ஒரு போர் போன்றது என்பதை அப்போதுதான் உணர்கிறேன்.

ஆனாலும் அடுத்து வரப் போகும் அவனது ஒரு அழைப்பிலோ, சின்ன மின்னஞ்சலிலோ நான் சிறகடிப்பேன். இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோசமானவளாக ஆனந்தச் சிறகுகளை விரித்த படி உயர உயரப் பறந்து கொண்டே இருப்பேன். என் வானம் எனக்கு மட்டும் சொந்தமாக இருக்கும். மீண்டும் ஏதோ ஒரு வார்த்தையாலோ அல்லது வார்த்தைகளே இல்லாத மௌனத்தாலோ அவன் என்னை நோகடிக்கும் வரை பறந்து கொண்டே இருப்பேன். அவன் என்னை நினைக்கவில்லையோ என்ற நினைவுகளுடன் மோதி, மூக்குடைந்து, என் சிறகுகள் கிழிந்து கீழே தொப்பென வீழும் வரை பறந்து கொண்டே இருப்பேன்.

வீழ்ந்த பின்னும் மின்னஞ்சல் தேடி, தொலைபேசி அழைப்புக்காய் ஓடி… அவன் நினைவுகளில் வாடிக் காத்திருப்பேன்.

அவ்வப்போது என் கண்கள் பனித்து விழியோரம் உருள்கின்ற கண்ணீர் துளிகளிலும், ஏகாந்தப் பொழுதுகளில் இதழோரம் துளிர்க்கின்ற புன்னகைகளிலும் அவன் நினைவுகள்தான் ஒட்டியிருக்கின்றன என்று சொன்னால் அவன் நம்புவானோ, இல்லையோ, இதுதான் காதல் என்பதை நான் நம்புகிறேன்.

இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட இந்தக் காதல் என்பது மிக மிக இனிமையானது. இன்பமானது, அதை நான் முழுவதுமாக உணர்கிறேன். இதே காதல்தான் சமயத்தில் காதல் ஒரு போர் போன்றது என்ற உணர்வையும் எனக்குத் தருகிறது.

சந்திரவதனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக