நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் தற்போது பரவி வரும் காதல் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை சீரழித்து வருகிறது. தமிழகத்தில் வாலிப பருவத்தில் வரும் காதலில் பெரும்பாலானவை தோல்வியையே சந்தித்து வருவதற்கு அது உண்மையான காதலே இல்லை என்பதே முக்கிய காரணம் ஆகும்.
டீன் ஏஜ் பருவம் என்பது தீயில் நடப்பது போன்றதாகும். வாலிப பருவத்தில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சில தடுமாற்றங்கள் நிகழ்வதே இங்கு காதலாக கருதப்படுகிறது. அவ்வாறு ஏற்படும் தடுமாற்றத்தை காதல் என்று எடுத்துக்கொள்வது தவறு. ஆனால் அத்தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவது நெருப்பாற்றை நீந்தி கடப்பதற்கு சமம். அந்த அளவுக்கு சிந்திக்கும் திறன் அப்பருவத்தில் ஏற்படாது என்பதும் முற்றிலும் உண்மையே. அத்தடுமாற்றத்தில் இருந்து விடுபட்டு வாழ்க்கையின் உண்மையை புரிந்து கொண்டால் வாலிப பருவத்தில் வருவது காதலே அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.
டீன் ஏஜ்
உடலில் ஏற்படும்
உணர்ச்சி மாற்றம்
அது
காதல் அல்ல
காமம்...
முதலில் எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு மனிதன் வாழும் சூழ்நிலை உருவாகவேண்டும். அதற்கு அவன் சுயமாக நிற்கவேண்டும். அவ்வாறு சுயமாக நிற்க அவன் நன்றாக படிக்கவேண்டும். அதன் பின் நல்ல வேளையில் அமரவேண்டும். அதற்கு பின் தான் காதலை பற்றி ஒருவன் சிந்திக்க வேண்டும். தனக்கு பிடித்த பெண்ணை பற்றி சிந்தித்து, உணர்ந்து அப்பெண் தன் வாழ்க்கையில் இணைந்தால் தன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்ற மன உறுதிக்கு ஒருவன் வரவேண்டும்.
பின் தனக்கு உயிர் கொடுத்தவர்களும், சமூகத்தில் உயர்வான நிலைக்கு தன்னை உயர்த்தியவர்களுமான பெற்றோரிடம் தனது காதலை பற்றி கூறி அவர்களது சம்மதத்தை பெற வேண்டும். தனது மகனை மிகப்பெரிய அளவுக்கு சமுதாயத்தில் உயர்த்திய பெற்றோர் நிச்சயமாக அவனின் காதலையும் ஏற்றுக்கொள்வார்கள் என்பது நிஜம். அப்படி அமையும் காதல் திருமணம் தான் நிஜ வாழ்க்கையில் வெற்றி பெறும் காதலாக அமையும். இது காதலின் முதல் வகை.
இனி இரண்டாவது வகையை பார்ப்போம். தனது மகனுக்கு நல்ல கல்வியை கொடுத்து அவன் நல்ல வேலையில் அமர உதவிய பெற்றொர் அவனது மண வாழ்க்கையும் நல்ல விதமாகவே அமையவேண்டும் என்றே பெரிதும் விரும்புவர். அவ்வாறு தனது நலனை பற்றி சிந்திக்கும் பெற்றோரின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவர்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணை திருமணம் செய்துகொண்டு தனக்கு வரும் மனைவியை காதலித்து, பெற்றோருக்கும் மனைவிக்கும் ஏற்றவாறு குடும்ப வாழ்க்கையை நடத்த முன்வரவேண்டும். இந்த திருமண வாழ்க்கையில் மூன்று முடிச்சுகளுக்கு ஏற்றவாறு முதல் மூன்று வருடங்கள் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் அக்னிப்பரீட்சையாக அமையும்.
இந்த மூன்று வருடங்களில் பெற்றோர் மற்றும் மனைவி ஆகிய இரு தரப்பினரையும் மனம் கோணாதவாறு பார்த்துக்கொண்டு அவன் அப்பரீட்சையை சாமர்த்தியமாக கடந்துவிட்டால் அதுவும் வெற்றி பெறும் காதலாக அமையும். அவனுக்கு அமையும் மனைவியும் விட்டுக்கொடுக்கும் தன்மை உள்ளவளாக இருந்து விட்டால் அக்காதல் இரட்டிப்பு வெற்றியை அடையும்.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் கணக்கெடுத்து பார்த்தால் இங்கு பெரிதும் சரிவே காணப்படுகிறது. கணவரின் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக நடந்துகொள்ளவேண்டும், தன்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு நற்பெயரை வாங்கித்தரவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புவதாகவே தெரியவில்லை.
அதிலும் வேலைக்கு போகும் பெண்ணாக இருந்துவிட்டால், தலைகுனிந்து மரியாதையோடு நடக்க வேண்டிய அவள் தலைக்கணத்துடனும், தான் என்ற அகம்பாவத்துடனும் நடப்பதன் காரணமாகவே தமிழகத்தில் தற்போது அதிக அளவில் விவகாரத்து ஏற்படுகிறது. அதிலும் பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரை அவர்கள் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் செல்லவேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு இயற்கைக்கு முரணாக நடந்து கொள்ளும் மருமகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு தனது மகனை மட்டும் மருமகள் நன்றாக பார்த்துக்கொண்டால் போதும் என்ற எண்ணத்தில் பெற்றோர்களும் தங்களது மகனை விட்டு ஒதுங்கிவிடுவதும் இன்றைய சமூகத்தில் பரவலாக காணப்படுகிறது.
திருமணம்
இல்லற வாழ்வின்
தொடக்கம்
இடியாப்ப சிக்கல்களின்
துவக்கம்
இறைவனின் பரிட்சைக்கு
முன்னோட்டம்
சரி. மூன்றாவது வகையை பார்ப்போமா?
தன்னை திருமணம் செய்து கொண்ட கணவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும். தனது மாமனார், மாமியாரின் விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து குடும்பத்தை தாங்கிப்பிடிக்கும் மனைவியின் தியாகத்தை புரிந்து கொண்டு அவளுக்கு உண்மையான அன்பை கொடுக்கவேண்டியது ஒவ்வொரு கணவனின் முக்கிய கடமையாகும்.
பெற்றோரோடு வசிக்கும் போது அந்த அன்பை மனைவிக்கு கொடுப்பதற்கு தவறினாலும் பெற்றோரின் காலத்திற்கு பின்னாவது தன்னையே நம்பி வந்து தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் துன்பங்களையும், இன்பங்களையும் தன்னுள்ளே சுமந்து வாழ்ந்து வரும் மனைவிக்கு உரிய மரியாதையையும், நல்ல அன்பையும் ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக தரவேண்டும்.
தனக்கும், தனது பெற்றோருக்கும், தங்களின் குழந்தைகளுக்காகவும் இல்லறத்தை நல்லறமாக நடத்திவரும் மனைவியை தன் இரு கண்களாகவே ஒவ்வொரு மனிதனும் கருதவேண்டும். தற்போதைய நடைமுறை வாழ்வில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருதரப்பும் சரியாக புரிந்து செயல்படுகின்றனர் என்பது பெருமளவு சரி தான். ஆக மேற்கூறிய வகையில் அமையும் இல்லற வாழ்க்கை காதலின் மும்மடங்கு வெற்றியை பறைசாற்றுவதாக அமையும்.
இங்கே தனக்காக தியாக உள்ளத்தோடு வாழும் மனைவியை பற்றி புரிந்துகொள்ளாமல் மனைவியை கொடுமைப்படுத்தி மிருகம் போல் நடந்து கொள்ளும் ஆண்களும் சமூகத்தில் உள்ளனர். அவ்வாறு அமையும் நரக வாழ்க்கையையும் சகித்துக்கொள்ளும் பத்தினித் தெய்வங்கள் நமது கிராமங்களிலும் நகரத்திலும் ஏராளமானோர் உள்ளனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
பெண்
கணவனை
புரிந்துகொண்டாள்
கடமையை
தெரிந்துகொண்டாள்
இல்லறத்தை
இனிமையாக்கினாள்
இவளே குடும்பத்தின்
தலைமகள் ஆனாள்...
இந்த உண்மைகளை புரிந்து கொண்டு எப்படிப்பட்ட காதல் வாழ்க்கைக்கு நல்லது என்பதை புரிந்துகொண்டு ஆண்களும், பெண்களும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்