சனி, 12 ஜூலை, 2014

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 1 நேரம் !!!!

நம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். “எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு” !

ஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்களுக்கு கிரிக்கெட் மோகம் இருக்கும் போது, பெண்களுக்கு சீரியல் மோகம் இருக்கும். ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கின்ற ரசனைகள் ஒரு கூரையின் கீழ் வந்து சேர்வது தானே குடும்பம் ! இந்த இடத்தில் ரசனைகள் முட்டிக் கொள்ளாமல் எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

“அவருக்கென்ன, ஆபீஸே கதின்னு கட்டிகிட்டு அழுவாரு”  என மனைவி புலம்பினால் உடனே எகிறிக் குதிக்காதீங்க. ஒரு நிமிடம் அப்படியே நின்று நிதானித்துப் பாருங்கள். உண்மையில் எனது நேரத்தில் எத்தனை சதவீதம் வேலைக்காய் அல்லது வேலை சார்ந்த விஷயங்களுக்காய் செலவிடுகிறேன். அந்தப் பட்டியல் உண்மையானதாய் இருக்கணும். நீங்க வீட்டில் உட்கார்ந்து செல்போனில் ரெண்டு மணி நேரம் ஆபீஸ் விஷயங்களை அரட்டையடிக்கிறது கூட இந்த பட்டியல்ல தான் வரணும். !

இப்போ அப்படியே மனைவியர் ஒரு நிமிஷம் யோசிங்க. உங்களுடைய நேரத்தில் கணவனுக்காக ஸ்பெஷலாய் நீங்கள் ஒதுக்கும் நேரம் எவ்வளவு ? சீரியல் பார்ப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, குழந்தைகளைக் கவனிப்பது எனும் விஷயங்களைத் தாண்டியும் நீங்கள் கணவனோடு நேரம் செலவிடுகிறீர்களா என்பது ஒரு குட்டிக் கேள்வி.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒன்றுண்டு ! செலவிடும் நேரம் “குவாலிடி டைம்” ஆக இருக்க வேண்டும். அரை மணி நேரம் ரெண்டு பேரும் பேச உக்கார்ந்து குற்றம் சொல்ல ஆரம்பித்தால் எல்லாம் போச்சு. கிடைக்கிற அந்த அரை மணி நேரத்தை எப்படி ஒரு அற்புத நேரமாய் செலவிடுகிறீர்கள் என்பதில் ரொம்பவே கவனமாய் இருங்கள். ஒரு ஐந்து நிமிட உரையாடல் கூட உங்களுடைய ஒரு நாளை ஆனந்தமாக வைத்திருக்க முடியும். ஒரு நிமிட சண்டை கூட உங்களுடைய ஒரு வார கால நிம்மதியை புதைகுழிக்குள் போட்டு மிதிக்கவும் முடியும்.

கணவனும் மனைவியும் மாறி மாறிக் குற்றம் சொல்லத் தொடங்கினால், தோற்றுப் போவது கணவனுமல்ல, மனைவியுமல்ல, தாம்பத்யம் தான். ஒரு ஸ்பெஷல் நேரத்துக்காக ஒரு சீரியலை கட் செய்வதோ, ஐ.பி.எல் மேட்சை ஆஃப் பண்ணி வைப்பதோ தாம்பத்யத்தைத் தழைக்க வைக்கும் !

ரெண்டு பேருக்குமே ஒரு குறிப்பிட்ட நேரம் ஃபிரீயா இருக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வது நல்ல பழக்கம். அது ஏதோ ஒரு தியாகம் மாதிரி, “உனக்காக என் வேலையை விட்டுட்டு வந்திருக்கேன். இப்போ பேசு” என சொன்னால் எல்லாம் போச்சு. விட்டுக் கொடுத்தலின் முக்கிய அம்சமே, தான் விட்டுக் கொடுத்தது அடுத்த நபருக்குத் தெரியாமல் இருப்பது தான். அதில் தான் உண்மையான அன்பு ஒளிந்து  இருக்கிறது !

அதை விட்டு விட்டு, “நான் பிரியா இருக்கும்போ நீ பிஸியாயிடறே, நான் பிஸியா இருக்கும்போ நீ ஃபிரீ ஆயிடறே” அப்புறம் எப்போ பேசறதாம் ? என புலம்புவதிலும் அர்த்தம் இல்லை.

கணவன் மனைவி இணைந்து அதிக நேரத்தைச் செலவிட்டால் அந்த குடும்பங்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குடும்ப இயலின் பால பாடம் ! அத்தகைய தம்பதியருக்கு வருகின்ற சிக்கல்களெல்லாம் விரைவிலேயே மறைந்து விடுகின்றன. சந்தேகம் இருந்தால் உங்கள் தாத்தா, பாட்டிகளிடம் கேட்டுப் பாருங்கள். எப்போதும் சுற்றிச் சுற்றி வரும் அன்யோன்யமும், சேர்ந்தே ஊட்டி, உண்டு, சிரித்துக் களிக்கும் மாலைப் பொழுதுகளும் தங்களையறியாமலேயே குடும்ப வாழ்க்கையை எத்தனை ஆரோக்கியப் படுத்தியிருக்கின்றன என்பதை !
கணவன் மனைவி சேர்ந்து செலவிட எப்படி டைம் கண்டு பிடிப்பது ? அல்லது நேரத்தை எப்படி உருவாக்குவது ? அதற்கு சில வழி முறைகள் உண்டு.

1. இருவருக்குமே பிடித்தமான ஒரு பொதுவான ஹாபி, அல்லது விருப்பத்தை வைத்துக் கொள்ளுங்கள். சேர்ந்து நேரம் செலவிட இது ஒரு அற்புதமான வழி. அது விடிகாலை ஜாகிங் ஆனாலும் சரி, தோட்டத்தைப் பராமரித்தல் ஆனாலும் சரி, அல்லது இசை, நடனம் எதுவானாலும் சரி, இணைந்தே பயணிக்கும் ஒரு ஹாபி இருவரையும் வெகுவாக இணைக்கும். சேர்ந்து செலவிடும் நேரத்தை உருவாக்கிக் கொடுக்கும் !

2. ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை இருவரும் பேசுவதற்காய் ஒதுக்குங்கள். அது காலையில் காஃபி போடும் நேரமானாலும் சரி, மாலையில் ஓய்வாய் இருக்கும் நேரமானாலும் சரி. உங்கள் வேலைக்குத் தக்கபடி ஒரு நேரத்தை ஒதுக்கிப் பாருங்கள். அந்த நேரத்தை உங்கள் மனம் திறந்த பகிர்தலுக்காய் ஒதுக்குங்கள். நிச்சயம் உறவு வலுப்படும்.

3. இணைந்தே பிரார்த்தனை செய்கிறீர்களா ? உங்கள் வாழ்க்கை வலுப்படும் என்பதில் ஐயமில்லை. இறைவனுக்கு முதலிடம் தரும் இல்லங்களில் ஈகோ விலகி விடுகிறது, விட்டுக் கொடுத்தலும், மன்னித்தலும் தவழ்கிறது அதனால் குடும்ப உறவு ஆழமும், அர்த்தமும் அடைகிறது. இணைந்தே பிரார்த்தனை செய்வதும், அடுத்தவருக்காய் பிரார்த்தனை செய்வதும் உறவை வலுப்படச் செய்யும் விஷயங்கள்.

4. மனைவியோ, கணவனோ ஒரு வேலை செய்யும் போது அந்த வேலையைப் பகிர்ந்து செய்யுங்கள். அப்போது ஒரே இடத்தில் ஒரே வேலையைச் செய்யும் போது இருவருமே இணைந்து கொஞ்சம் நேரத்தைச் செலவிடும் சூழல் தோன்றும். அது வேலையைத் தாண்டி சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் !

5. எல்லா வேலையையும் செய்து முடிச்சப்புறம் தான் குடும்பம், எனும் அக்மார்க் மடத்தனத்தைச் செய்யவே செய்யாதீர்கள். உங்கள் பட்டியலில் குடும்பத்துக்காக நேரம் செலவிடுதல் டாப் 2 க்குள் நிச்சயம் இருக்கட்டும்.

6. இது தொழில்நுட்ப யுகம், சோசியல் நெட்வர்க் காலம். உங்கள் போனிலும், கம்ப்யூட்டரிலும் உள்ள இணையத்தை எட்டிப் பார்க்காமல் இருந்தாலே போதும் கொஞ்சம் நேரத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்காக உருவாக்கி விட முடியும் ! சந்தேகம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

7. மாலையில் செய்ய வேண்டிய சில வேலைகளை விடியற்காலையில் முடித்து விட முடியுமா என பாருங்கள். அந்த நேரத்தில் நீங்கள் முக்கியமான சில அலுவல்களை முடித்தால் மாலை நேரம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும், குடும்பத்தினருடன் பேசவும் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தரும்.

8. யார் என்ன கேட்டாலும், “ஓகே…” என தலையாட்டும் பழக்கத்தைக் கடாசுங்கள். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை தேவையற்ற கமிட்மென்ட்களுக்காக கை கழுவி விடாதீர்கள். மிக முக்கியமான விஷயங்கள் தவிர மற்றவையெல்லாம் “சாரி.. நோ…” எனும் உங்கள் பதிலுடன் விடைபெறட்டும் !

9. தனியே செலவிடும் நேரங்களை சும்மா சினிமா பாக்கவோ, சீரியல் பாக்கவோ செலவிடாதீர்கள். அது ஒருவகையில் தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் தான் – கதை தான். அதை விட, சேர்ந்து நடப்பது, பேசுவது, ஒரு புதிர் விளையாட்டு விளையாடுவது, கேரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது என செலவிட முயலுங்கள்.

10. மனைவிகள் அன்பானவர்கள். நீங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டே இருக்காவிட்டால் கூட வீட்டில் இருக்கிறீர்கள் எனும் உணர்வே அவர்களுக்கு நிம்மதியையும், பாதுகாப்பையும், நிறைவையும் தருவதுண்டு. எனவே தேவையற்ற நண்பர் சகவாசங்களைக் குறைத்து வார இறுதிகளிலெல்லாம் வீட்டிலேயே இருங்கள்.

டைம் இல்லை என்பதெல்லாம் அக்மார்க் பொய். எல்லோருக்கும் 24 மணி நேரம் தான் உண்டு. அதை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம். அதில் எவ்வளவு மணி நேரம் உங்கள் மனைவிக்காகவோ, கணவனுக்காகவோ ஆனந்தமாய்ச் செலவிடுகிறீர்கள் என்பது தான் கேள்வி !

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், அழுத்தமாக. உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நேரம் ஒதுக்குங்கள், அது ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை.

வியாழன், 6 மார்ச், 2014

புத்திசாலி பெண்களை விரும்பும் ஆண்கள்

இவ்வுலகில் ஒவ்வொருக்குமே தனக்கு துணையாக வருபவர் இப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதில் பெண்களுக்கு தான் எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் தனக்கு துணையாக வரும் பெண் இத்தகைய குணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.
Young Woman Sitting in Front of a Computer and Laughingஎதிர்பார்ப்புக்கள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் எந்த ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. மேலும் தன் துணையின் எதிர்பார்ப்பு புரிந்தும், அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடக்காமல் இருந்தால், உண்மையில் அந்த உறவில் எந்த ஒரு சந்தோஷமும் சுவாரஸ்யமும் இருக்காது.
• சில பெண்கள் தங்களது துணையின் நண்பர்களுடன் சகஜமாக பேசமாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆண்களுக்கு பிடிக்காது. நன்கு சந்தோஷமாக, அவர்களது நண்பர்களுடன் பேசி, துணைக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கும் பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கும்.
• தற்போதைய ஆண்கள் தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பர். இப்படி இருப்பதால், பெண்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், எந்த கஷ்டத்தையும் தாங்கி எதிர்த்து வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதால் தான். ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள்.
• எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்கள் ஓடிவிடுவார்கள். ஆகவே எந்த ஒரு விஷயத்திற்கும் அவர்களை நச்சரிக்காமல் இருக்கும் பெண்களைத் தான் ஆண்கள் விரும்புவார்கள்.
• எவ்வளவு தான் அகம் அழகாக இருந்தாலும், கொஞ்சம் புற அழகும் வேண்டுமல்லவா? எனவே அழகை சரியாக பராமரித்து வரும் பெண்களையும் ஆண்கள் விரும்புவார்கள். அதிலும் நீங்கள் கொஞ்சம் மற்றவர்கள் சைட் அடிக்கும் வகையில் சூப்பர் பிகர் போன்று காணப்பட்டால், அவர்கள் உங்களை பெற்றதற்கு மகிழ்ச்சியாக இருப்பதுடன், பெருமையாகவும் உணர்வார்கள்.
• காதலன் எப்போதும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று எண்ணாமல், காதலனை அவர்கள் போக்கில் விடும் பெண்களையும் ஆண்களுக்கு பிடிக்கும். ஏனெனில் உறவில் கொஞ்சம் சுதந்திரம் இருந்தால் தான், அந்த உறவு ஆரோக்கியமாக இருக்கும்.
• புத்திசாலித்தனத்துடன் செயல்படும் பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவார்கள். ஏனெனில் இத்தகைய பெண்களால் எத்தகைய சூழ்நிலையையும் சமாளித்து வெளிவருவார்கள். மேலும் சில ஆண்கள் தான் சொல்வது தான் சரி என்று இருப்பார்கள். அத்தகைய ஆண்களை புத்திசாலித்தனமான பெண்கள் எளிதில் மாற்றுவார்கள்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.


1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் .

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9)உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10)நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்...

புதன், 12 பிப்ரவரி, 2014

காதலர் தினம்


 

காதலனே ..............! 
உன் நினைவுத் தடங்களை 
கண்ணீரோடு தினமும் - என் 
தலையணையில் தேடிப் பார்கிறேன் 
இனிக்கும் உன் குரலை நினைத்தப் பின் தான் 
இமைகள் நிம்மதியாக ஒன்றுடன் 
ஓன்று அணைத்துக் கொண்டு 
தூக்கதை தருகிறது - இருந்தாலும் 
கனவில் நீ வந்து கண்டபடி 
கண்ணா மூச்சியாடுகிறாய் ..............! 

காதலனே ......................! 
ஒவ்வொரு காலைப் பொழுதில் 
கண்விழிக்கும் போது - என்னுடன் 
நீ உறங்குவதாய் நினைத்து -கட்டிலில் 
உன்னைத் தேடி ஏமாற்றம் அடைகிறேன் ...! 

என் வாசமுள்ள நேசனே........!என் இடுப்பை 
கிள்ளி சீண்டிப் பார்க்கும் ராட்ஷசனே 
நீ கிள்ளும் போது கையை தட்டி விட்டது 
மறுபடியும் நீ சீண்டி விளையாட மாட்டயா -என்ற 
ஏக்க பொய் கோபத்தினால் தான் என்பதை 
உணர்ந்துக் கொள்ளடா .......! 

என் இதயக் காதல் துணையே ......! 
என்னை உன் மார்பில் தாங்கி 
முத்த மழை பொழியும்போது -அந்த 
இன்பசுகத்தில் செத்து விட துடித்தேனடா ...! 
உன் ஒற்றை விரலால் பம்பரமாய் சுற்றி 
என் இளமையை கொதிக்கவிட்டு 
அழகு பார்த்தவனே ......! 


நீ கோபப் படும்போது சிவந்து போகும் 
உன் காது மடல்களை தின்று விட 
துடிக்கிறேனடா- இதழை வெளுப்பாக்கி 
கண்களை சிவக்கவைத்தவனே.....! 

சித்திரமாய் உன்னை என் நினைவில் 
செதுக்கி - அதில் என்னை நான் இழைத்துக் 
கொண்டது உனக்கு தெரியுமாடா ......!-காதலால் 
என்னை துண்டு துண்டாய் உடைத்தவனே ...! 
உன்னை கட்டிக் கொள்ள என்னை ஒட்டிவிடு 

இதே காதலர் தினத்தில் ஒருநாள் என்னை 
பிரிந்து போனவனே..! - வருடங்கள் போய் 
பலவானது - இருந்தாலும் உனக்காய் வாசமுடன் 
காதலோடு காத்திருக்கிறேன்...! இன்றாவது 
வந்து விடு .....! - என்னை ஒட்டிவிடு ........!

காதலர் தினம் - சிறப்பு பார்வை



நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் தற்போது பரவி வரும் காதல் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை சீரழித்து வருகிறது. தமிழகத்தில் வாலிப பருவத்தில் வரும் காதலில் பெரும்பாலானவை தோல்வியையே சந்தித்து வருவதற்கு அது உண்மையான காதலே இல்லை என்பதே முக்கிய காரணம் ஆகும்.

டீன் ஏஜ் பருவம் என்பது தீயில் நடப்பது போன்றதாகும். வாலிப பருவத்தில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சில தடுமாற்றங்கள் நிகழ்வதே இங்கு காதலாக கருதப்படுகிறது. அவ்வாறு ஏற்படும் தடுமாற்றத்தை காதல் என்று எடுத்துக்கொள்வது தவறு.  ஆனால் அத்தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவது நெருப்பாற்றை நீந்தி கடப்பதற்கு சமம். அந்த அளவுக்கு சிந்திக்கும் திறன் அப்பருவத்தில் ஏற்படாது என்பதும் முற்றிலும் உண்மையே. அத்தடுமாற்றத்தில் இருந்து விடுபட்டு வாழ்க்கையின் உண்மையை புரிந்து கொண்டால் வாலிப பருவத்தில் வருவது காதலே அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.

டீன் ஏஜ்

உடலில் ஏற்படும்
உணர்ச்சி மாற்றம்
அது
காதல் அல்ல
காமம்...

முதலில் எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு மனிதன் வாழும் சூழ்நிலை உருவாகவேண்டும். அதற்கு அவன் சுயமாக நிற்கவேண்டும். அவ்வாறு சுயமாக நிற்க அவன் நன்றாக படிக்கவேண்டும். அதன் பின் நல்ல வேளையில் அமரவேண்டும். அதற்கு பின் தான் காதலை பற்றி ஒருவன் சிந்திக்க வேண்டும். தனக்கு பிடித்த பெண்ணை பற்றி  சிந்தித்து, உணர்ந்து அப்பெண் தன் வாழ்க்கையில் இணைந்தால் தன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்ற மன உறுதிக்கு ஒருவன் வரவேண்டும்.

பின் தனக்கு உயிர் கொடுத்தவர்களும், சமூகத்தில் உயர்வான நிலைக்கு தன்னை உயர்த்தியவர்களுமான பெற்றோரிடம் தனது காதலை பற்றி கூறி அவர்களது சம்மதத்தை பெற வேண்டும். தனது மகனை மிகப்பெரிய அளவுக்கு சமுதாயத்தில் உயர்த்திய பெற்றோர் நிச்சயமாக அவனின் காதலையும் ஏற்றுக்கொள்வார்கள் என்பது நிஜம். அப்படி அமையும் காதல் திருமணம் தான் நிஜ வாழ்க்கையில் வெற்றி பெறும் காதலாக அமையும். இது காதலின் முதல் வகை.

இனி இரண்டாவது வகையை பார்ப்போம். தனது மகனுக்கு நல்ல கல்வியை கொடுத்து அவன் நல்ல வேலையில் அமர உதவிய பெற்றொர் அவனது மண வாழ்க்கையும் நல்ல விதமாகவே அமையவேண்டும் என்றே பெரிதும் விரும்புவர். அவ்வாறு தனது நலனை பற்றி சிந்திக்கும் பெற்றோரின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவர்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணை திருமணம் செய்துகொண்டு தனக்கு வரும் மனைவியை காதலித்து, பெற்றோருக்கும் மனைவிக்கும் ஏற்றவாறு குடும்ப வாழ்க்கையை நடத்த முன்வரவேண்டும். இந்த திருமண வாழ்க்கையில் மூன்று முடிச்சுகளுக்கு ஏற்றவாறு முதல் மூன்று வருடங்கள் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் அக்னிப்பரீட்சையாக அமையும்.

இந்த மூன்று வருடங்களில் பெற்றோர் மற்றும் மனைவி ஆகிய இரு தரப்பினரையும் மனம் கோணாதவாறு பார்த்துக்கொண்டு அவன் அப்பரீட்சையை சாமர்த்தியமாக கடந்துவிட்டால் அதுவும் வெற்றி பெறும் காதலாக அமையும். அவனுக்கு அமையும் மனைவியும் விட்டுக்கொடுக்கும் தன்மை உள்ளவளாக இருந்து விட்டால் அக்காதல் இரட்டிப்பு வெற்றியை அடையும்.

ஆனால் நடைமுறை வாழ்க்கையில் கணக்கெடுத்து பார்த்தால் இங்கு பெரிதும் சரிவே காணப்படுகிறது. கணவரின் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக நடந்துகொள்ளவேண்டும், தன்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு நற்பெயரை வாங்கித்தரவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புவதாகவே தெரியவில்லை.

அதிலும் வேலைக்கு போகும் பெண்ணாக இருந்துவிட்டால், தலைகுனிந்து மரியாதையோடு நடக்க வேண்டிய அவள் தலைக்கணத்துடனும், தான் என்ற அகம்பாவத்துடனும் நடப்பதன் காரணமாகவே தமிழகத்தில் தற்போது அதிக அளவில் விவகாரத்து ஏற்படுகிறது. அதிலும் பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரை அவர்கள் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் செல்லவேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு இயற்கைக்கு முரணாக நடந்து கொள்ளும் மருமகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு தனது மகனை மட்டும் மருமகள் நன்றாக பார்த்துக்கொண்டால் போதும் என்ற எண்ணத்தில் பெற்றோர்களும் தங்களது மகனை விட்டு ஒதுங்கிவிடுவதும் இன்றைய சமூகத்தில் பரவலாக காணப்படுகிறது.

திருமணம்

இல்லற வாழ்வின்
தொடக்கம்
இடியாப்ப சிக்கல்களின்
துவக்கம்
இறைவனின் பரிட்சைக்கு
முன்னோட்டம்

சரி. மூன்றாவது வகையை பார்ப்போமா?

தன்னை திருமணம் செய்து கொண்ட கணவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும். தனது மாமனார், மாமியாரின் விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து குடும்பத்தை தாங்கிப்பிடிக்கும் மனைவியின் தியாகத்தை புரிந்து கொண்டு அவளுக்கு உண்மையான அன்பை கொடுக்கவேண்டியது ஒவ்வொரு கணவனின் முக்கிய கடமையாகும்.

பெற்றோரோடு வசிக்கும் போது அந்த அன்பை மனைவிக்கு கொடுப்பதற்கு தவறினாலும் பெற்றோரின் காலத்திற்கு பின்னாவது தன்னையே நம்பி வந்து தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் துன்பங்களையும், இன்பங்களையும் தன்னுள்ளே சுமந்து வாழ்ந்து வரும் மனைவிக்கு உரிய மரியாதையையும், நல்ல அன்பையும் ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக தரவேண்டும்.

தனக்கும், தனது பெற்றோருக்கும், தங்களின் குழந்தைகளுக்காகவும் இல்லறத்தை நல்லறமாக நடத்திவரும் மனைவியை தன் இரு கண்களாகவே ஒவ்வொரு மனிதனும் கருதவேண்டும். தற்போதைய நடைமுறை வாழ்வில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருதரப்பும் சரியாக புரிந்து செயல்படுகின்றனர் என்பது பெருமளவு சரி தான். ஆக மேற்கூறிய வகையில் அமையும் இல்லற வாழ்க்கை காதலின் மும்மடங்கு வெற்றியை பறைசாற்றுவதாக அமையும்.

இங்கே தனக்காக தியாக உள்ளத்தோடு வாழும் மனைவியை பற்றி புரிந்துகொள்ளாமல் மனைவியை கொடுமைப்படுத்தி மிருகம் போல் நடந்து கொள்ளும் ஆண்களும் சமூகத்தில் உள்ளனர். அவ்வாறு அமையும் நரக வாழ்க்கையையும் சகித்துக்கொள்ளும் பத்தினித் தெய்வங்கள் நமது கிராமங்களிலும் நகரத்திலும் ஏராளமானோர் உள்ளனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

பெண்

கணவனை
புரிந்துகொண்டாள்
கடமையை
தெரிந்துகொண்டாள்
இல்லறத்தை
இனிமையாக்கினாள்
இவளே குடும்பத்தின்
தலைமகள் ஆனாள்...

இந்த உண்மைகளை புரிந்து கொண்டு எப்படிப்பட்ட காதல் வாழ்க்கைக்கு நல்லது என்பதை புரிந்துகொண்டு ஆண்களும், பெண்களும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்

திங்கள், 10 பிப்ரவரி, 2014

கல்யாணமானவரகள் கல்யாணமாகாதவர்கள் யாவரும் வாசித்து பயனுறுங்கள்

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? 

1.எந்த வேளையிலும் உண்மை பேச வேண்டும்...
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளி, 10 ஜனவரி, 2014

உறவு அழியாமல் நிலைத்திட காதல் என்பது அவசியம்......

பொறாமை என்ற குணம் ஒரு உறவையே நாசமாக்கிவிடும். பொதுவாக ஒரு உறவில் பெண்கள் தான் அதிக பொறாமை குணத்துடன் பாதுகாப்பின்மையோடு இருப்பார்கள். தன் காதலனோடு பல பெண்கள் கடலை போடும் போது அந்த காதலிக்கு பொறாமை குணம் உண்டாவது இயல்பு தானே? அந்த சூழ்நிலையில் நாம் உணர்ச்சிவசப்பட்டு நடக்கும் போது தான் பிரச்சனைகள் உருவாகிறது. பல பெண்கள் உங்கள் காதலனிடம் கடலை போடும் போதும் பதிலுக்கு அவரும் வழிந்தால் மட்டுமே நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்ட வேண்டும்.


உங்கள் காதலன் பார்க்கும் அனைத்து பெண்களுடனும் நட்புடன் பழகும் போது நீங்கள் கூடுதல் கவனத்துடன் நடக்க வேண்டும். ஆனால் சரியான காரணமே இல்லாமல் பொறாமை பட்டால் உங்கள் உறவு புளித்து போய் மூச்சு முட்டி தத்தளிக்கும். எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி அல்லது காதலாக இருந்தாலும் சரி, அவநம்பிக்கை என்பது மட்டும் இருக்கவே கூடாது. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே காதலும் நம்பிக்கையும் இருப்பதால் மட்டுமே உங்கள் துணை உங்களுடன் இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியோடு இருந்த காலங்கள் எல்லாம் மறைந்து போவதற்கு ஆத்திரமும் பொறாமையும் காரணமாக அமைந்து விடும். உங்கள் உறவில் பொறாமை ஏற்படுவதற்கான காரணங்களை தவிர்க்க பல வழிகள் இருக்கிறது. அதற்கான சில டிப்ஸ்களை பற்றி இப்போது பார்க்கலாமா... நம்பிக்கை எந்த ஒரு உறவுக்குமே அடிப்படையாக விளங்குவது நம்பிக்கையே. உங்கள் துணையை எப்போதுமே உங்கள் அடி மனதில் இருந்து நம்புங்கள். அதற்காக அவரை குருட்டுத் தனமாக நம்ப வேண்டும் என்பதில்லை. உங்கள் நம்பிக்கையை முதலில் உங்கள் துணை சம்பாதிக்க வேண்டும். 
 
நம்பிக்கை என்பதை முதலில் நாம் சம்பாதிக்க வேண்டும். ஒரு முறை நம்பிக்கையை இழந்து விட்டால் அதனை மீண்டும் பெறுவது சுலபமல்ல. அதனால் பொறாமை குணத்தை தவிர்க்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் துணையின் மீது நம்பிக்கை வையுங்கள். அதே போல் அவரின் நம்பிக்கையையும் சம்பாதித்துக் கொள்ளுங்கள். 
 
உரையாடுங்கள் ஒரு உறவுக்கு பாலமாக இருப்பது உரையாடல்களே. ஒரு காதலன் காதலியிடையே சரிவர பேச்சுவார்த்தைகள் இல்லையென்றால் அவர்கள் காதல் உறவில் ஏதோ பிரச்சனை உள்ளதென்று அர்த்தமாகும். இரு உள்ளங்கள் ஒன்று சேர்வதே வாழ்நாள் முழுவதும் அவர்கள் சந்தோஷமாக சேர்ந்து வாழ்வதற்காகவே. வெறுமனே உடலுறவு மட்டும் உங்களை வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வைத்திருக்காது. உரையாடல்கள் என்பதும் கூட உங்கள் உறவில் பொறாமையை தவிர்க்க உதவும்.
 
விருப்பு வெறுப்புக்கு முக்கியத்துவம் எந்த ஒரு உறவும் வெற்றிகரமாக அமைய, அந்த ஜோடி தங்கள் தனித்துவத்தை இழக்காமல் இருக்க வேண்டும். அவரவரின் சொந்த விருப்பு வெறுப்புகளில் தலையிடக் கூடாது. இதில் பிரச்சனை ஏற்படும் போது தான் அந்த உறவில் பாதுகாப்பின்மை மற்றும் பொறாமை முளைக்க துவங்கும். உங்கள் துணையின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதில் அளவுக்கு அதிகமாக தலையிடக் கூடாது. அவர்களை அழுத்தி பிடிக்காமல் நிம்மதியாக மூச்சு விட விடுங்கள். நீங்கள் அவரை அதிகமாக அழுத்த அழுத்த அதற்கேற்ப உங்கள் காதலும் அழியத் தொடங்கும். 
 
புரிதல் ஒரு உறவில் பொறாமையை வளர விடாமல் தடுக்க ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் இருக்க வேண்டும். உங்கள் உறவு ஆரோக்கியத்துடன் நீடிக்க புரிதல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உங்கள் துணையின் தேவைகளை நன்றாக புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கைக்கும் புரிதலுக்கும் வித்தியாசம் உள்ளது. அவைகள் இரண்டும் வேறு வேறு தான் என்றாலும் ஒரு உறவு நீண்ட நாட்கள் நிலைத்திட அவை இரண்டுமே முக்கியம் தான். 
 
காதலை வாழ விடுங்கள் என்ன ஆனாலும் சரி, உங்கள் இதயத்தில் இருக்கும் காதல் மட்டும் தேய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த காதல் உணர்வு உங்களை விட்டு நீங்கி விட்டால் உங்கள் துணையை விட்டு எப்படி பிரியலாம் என்ற எண்ணம் தோன்ற துவங்கி விடும். ஒரு உறவு அழியாமல் நிலைத்திட காதல் என்பது அவசியம். காதல் மட்டும் இருந்தால் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி அதனை தைரியமாக சமாளிக்கலாம். அதே போல் பொறாமை மற்றும் பாதுகாப்பின்மையையும் உங்கள் காதலினால் சுலபமாக தவிர்த்து விடலாம்.
 

வேலை பார்க்கும் தம்பதியருக்கு இடையில் உறவை மேம்படுத்த சில வழிகள்!!!

நிறைய மக்கள் எவ்வாறு பழகுவது என்பதை கற்றுக்கொள்ளுவதில்லை. இந்த திறமை இல்லையென்றால், ஒரு மனிதன் நெருங்கிய உறவினர்களுக்கிடையே உறவுகளை தொடரும் தன்மையை இழக்கிறான். தன்னுடைய உணர்வுகளை வெளிபடுத்தும் திறமையும், பிறரை கவனிக்கும் திறமையும் இல்லாதவர்கள், நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது.   உங்கள் உரையாடும் திறனை வளர்ப்பதன் மூலம், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஆன அன்பு அதிகரித்து உங்கள் உறவை பாதுகாப்பாகவும் வைக்க முடியும். 
 
இன்றைய கால கட்டத்தில், மரியாதைக்குரிய உறவுள்ள தம்பதியர்கள், தங்களுடைய வேலையின் காரணமாக தங்களுக்குள் நல்ல உறவு மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ள நேரம் இல்லாமல் உள்ளனர். வெளிப்படையான, உண்மையான மற்றும் நேர்மறையான உரையாடும் திறன் மட்டுமே ஒரு நல்ல மற்றும் சந்தோஷமான உறவு முறையை ஏற்படுத்துவதற்கு சிறந்த அடித்தளமாக அமையும்.
 
தொடர்பு இன்மையால் நிறைய விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. தம்பதியருக்குள் ஏற்படும் வாதங்கள், சண்டைகள் மற்றும் முன்னும் பின்னுமாக பேசுவது போன்றவற்றை அவர்களுடைய திருப்தியான உறவு முறையால் மட்டுமே தவிர்க்க முடியும். யாராவது ஒருவர் விட்டுக்கொடுப்பது, பிரச்சனையை நல்ல வழியில் மாற்றி செலுத்த உதவுகிறது. 
 
தனிப்பட்ட வேலையால், தம்பதியர் சேர்ந்து சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் இருப்பதால், உங்கள் உறவு மற்றும் தொடர்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. நீங்கள் வெளியிலேயே அதிக நேரம் செலவிடுதலால்,உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு, உங்கள் உறவு முறை பாதிக்கப்படுகிறது. இதனால் யாராவது ஒருவர் முதிர்ச்சியுடன் கவனமாக செயல்பட்டு இந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது நேரம் ஒதுக்குவதன் மூலமும், வெளியில் அழைத்து செல்வதன் மூலமும் உங்களுக்குள் இருக்கும் இடைவெளியை நல்ல வழியில் சரி செய்ய வேண்டும். 
 
கவனித்தல் சிறந்த உறவுமுறை நல்ல உரையாடல்களை பொறுத்தே அமையும். அதற்கு கவனித்தல் மிகவும் முக்கியமாக விளங்குகிறது. இருவரும் சேர்ந்து பேசுவது என்பது ஒரே நேரத்தில் நடக்காத ஒன்று, ஒருவர் பேசும் போது மற்றவர் கவனிக்க வேண்டும். அதே போன்று ஒரே ஆளே தொடர்ந்து பேசுவதும் தப்பான உறவு முறைக்கு வழிவகுக்கிறது. நீங்கள் உங்கள் துணையின் பேச்சிற்கும் காது கொடுத்து கேட்டு அவர்களை நீங்கள் எந்த அளவிற்கு கவனிக்கிறீர்கள் என்பதை காட்ட வேண்டும். 
 
வெளிப்படையாயிருத்தல் நம்முடைய உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது நம் அனைவருக்கும் இயற்கையாக வரும் சுபாவம் அல்ல. எனினும் இந்த பழக்கம்,எளிமையாகவும் இயற்கையாகவும் உங்களுக்கு வருவதற்கு தேவையான முயற்சிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் கவனிப்பதை விட பேசுவதில் கவனத்தை செலுத்த வேண்டும். 
 
நீங்கள் உங்கள் துணையிடம் ஒவ்வொரு நாளும் உங்கள் நாள் கழிந்த விதத்தையும், நீங்கள் வேலை செய்த இடத்தில் நடந்த சம்பவங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நேர்மை நீங்கள் உங்கள் துணையிடம், உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில் நேர்மை இல்லா விடில், உங்கள் உறவிற்கு எந்த மதிப்பும் இல்லை. எனவே உண்மை எவ்வளவு கசப்பாக இருப்பினும், கடினமான விஷயமாக இருப்பினும் உண்மையை கூறுவதும், நேர்மையாய் இருத்தலும் மிகவும் முக்கியமானது. 
 
உறவில் ரகசியமும், பொய்யும் இல்லாமலிருந்தால், எளிமையாகவும், சிக்கல் இல்லாமலும், குழப்பம் இல்லாமலும் உறவு விளங்கும். மேலும் கடைசியாக, தேவையற்ற ஆச்சரியங்கள் மற்றும் விவரங்கள் போன்றவை கவனிக்கப்படாமல் இருந்தாலும் அவை ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். கவனம் சில நேரங்களில் சாதாரண உரையாடல்கள் தான், பயங்கர மோதல்களுக்கும், விவாதங்களுக்கும் வழிவகுத்து விடுகின்றன. 
 
எனவே ஒவ்வொருவரும் அவர்களுடைய துணையிடம் பேசும் போதும், அவர்கள் கூறுவதை கேட்கும் போதும் கவனத்துடன் செயல் பட வேண்டும். உங்களுடைய துணை பேசும் போது, அவர்கள் பேசுவது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும். மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மரியாதைக் குறைவால் தான், பெரும்பாலான திருமணங்களில் சண்டைகளும் மோதல்களும் ஏற்படுகின்றன. கட்டாயப்படுத்துதல் மற்றும் தொழிலில் தாழ்வு போன்றவைகளும் சில நேரங்களில் காரணங்களாகி விடுகின்றன. எனவே மரியாதை கொடுத்தலும், வாழ்வின் எந்த நிலையிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்தலும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமான வழியாகும்.

திருமணம் என்பது சொத்துக்காகவா அல்லது காதலுக்காகவா...?

திருமணம் என்பது இரண்டு உள்ளங்களுக்கு இடையே ஏற்படும் சமயப்பற்றான உறவாகும். திருமணம் என்பது பொதுவாக பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது காதல் திருமணமாக இருக்கலாம். தங்களை நேசிப்பதற்கும், காதலிப்பதற்கும், கவனிப்பதற்கும் வாழ்கை முழுவதும் உடனிருப்பதற்கும் ஒருவர் வேண்டும் என்பதால் தான் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்கின்றனர்.


ஆனால் சில பேர் அதனை லாபம் ஈட்டு தரும் ஒரு வியாபாரமாக பார்க்கின்றனர். அதனால் அவர்கள் அதிக சொத்து சுகம் உடைய ஆண்களையோ பெண்களையோ தான் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்கின்றனர். கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் கூட அது தான் உண்மை. பணம் கறப்பதற்காகவே சில பேர் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வியாபார நோக்கோடு நடக்கும் திருமணங்களும் வெற்றிகரமாகவே முடிகிறது.

அதனால் தான் என்னவோ பணத்திற்காக திருமணமா அல்லது காதலுக்காக திருமணமா என்ற கேள்வி எப்போதும் உலா வந்து கொண்டே இருக்கிறது. காதல் என்பது வாழ்க்கையில் ரொம்பவும் முக்கியம் தான். ஆனால் அதற்காக பணத்தை ஒதுக்கிட முடியுமா? அதிகரித்து கொண்டே இருக்கும் இன்றைய பொருளாதாரத்தோடு போராடா ஒருவர் நடைமுறைக்கு ஒத்து வரும் படியும் யோசிக்க வேண்டும் அல்லவா? நம் வாழ்க்கையை நடத்திட வெறும் காதல் மட்டும் போதாது அல்லவா? நம்மிடம் சுத்தமாக பணம் இல்லாமல் நம்மை சுற்றில் ஒரே பிரச்சனைகளாக நிலவும் போது காதல் வந்து உதவி புரிந்திட முடியுமா என்ன? காதலுக்காக திருமணம் செய்வதை விட பணத்திற்காக செய்யப்படும் திருமணங்கள் சிறந்ததாக விளங்குவதற்கு பல காரணங்களும் உதாரணங்களும் உள்ளது.

பணத்துடைய மதிப்பையும் முக்கியத்துவத்தையும் இப்போதெல்லாம் மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். பணம் அல்லது காதலுக்காக திருமணம் செய்வதற்கு சில உறவுமுறை சார்ந்த டிப்ஸ் இருக்கிறது. அவைகளை கொஞ்சம் பார்க்கலாமா? பாதுகாப்பு: பணத்திற்காக திருமணமோ அல்லது காதலுக்காக திருமணமோ, இரண்டிலுமே வருங்காலத்திற்கான பாதுகாப்பு தேவை. இங்கே பாதுகாப்பு என்று நாம் சொல்வதை நிதி நிலைப்புத்தன்மையை. அதனால் அதிக சொத்துக்கள் வைத்து நல்ல நிதி நிலைப்புத்தன்மையுடன் விளங்குபவர்களை பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம். காதல் என்பது முக்கியம் தான், ஆனால் பாதுகாப்பு என்பதும் முக்கியம் தானே. உங்கள் வருங்காலம் நல்ல படியாக அமைய ஒரு உறுதி வேண்டாமா? அதற்காக தங்கத்தை கொள்ளையடிப்பவர்களை போல் நடக்காதீர்கள். 
 
உங்கள் வருங்காலம் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் படி பார்த்துக் கொண்டு திருமணம் செய்யுங்கள். வசதி வாய்ப்புகள்: வசதி வாய்ப்புகள் என்று இங்கே நாங்கள் சொல்வது ஆடம்பர வாழ்க்கையை பற்றி அல்ல. திருமணத்திற்கு பின் அடிப்படை தேவைகளும் வசதிகளும் பூர்த்தியாக வேண்டாமா? வெறும் காதலுக்காக திருமணம் செய்தால் இந்த வசதிகள் எல்லாம் உங்கள் கிட்டி விடும் என்று சொல்ல முடியாதல்லவா? நீங்கள் யாரையாவது காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கூட அவர்களுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்த இந்த அடிப்படை வசதிகள் வேண்டும் தானே. மன நிறைவு: ஒரு உறவு நிலைத்திட காதல் என்பது அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு குடும்பம் நிலைத்திட பணமும் சொத்து சுகமும் காதலை போலவே தேவைப்படுகிறது. 
 
 
சொத்து சுகமோ அல்லது காதலோ, இரண்டையுமே குறைவாக எடை போட முடியாது. ஒரு குடும்பத்திற்கு மனதுக்கு நிறைவான வாழ்க்கை வேண்டுமானால் அதற்கு பணம் தேவை. ஒரு பெண்ணுக்கு வேண்டியது எல்லாம் அவளின் குடும்ப பந்தம் நீண்ட ஆயுளோடு விளங்கி அவளின் தேவைகள் பூர்த்தியாவதே. இதுவே ஒரு ஆண் என்றால், அவன் குடும்பத்தை அன்பாக கவனித்துக் கொள்ளவும் அவனை திருப்தியாக வைத்துக் கொள்ளும் ஒரு மனைவியை எதிர்பார்க்கின்றான். 
 
பணம் அல்லது காதலை அடிப்படையாக கொண்டதோ; எதுவாக இருந்தாலும் அந்த திருமண பந்தத்தில் மன நிறைவு கிடைக்க வேண்டும். காதலை விட பணத்திற்காக திருமணம் செய்தவர்களுக்கு தான் அதிக மன நிறைவு கிடைக்கிறதாம். குடும்ப பந்தம்: பழங்காலத்தில் இருந்து நம் சமுதாயத்தில் பெரியோர்களால் நடத்தப்படும் திருமணங்கள் சொத்து சுகத்தை அடிப்படையாக வைத்தே செய்யப்படுகின்றன. தங்களுக்கு நிகரான சாதி, சமுதாயம், ஆஸ்தி மற்றும் அந்தஸ்தை கொண்ட குடும்பத்தில் தான் சம்பந்தம் செய்து கொள்கின்றனர். 
 
பணத்திற்காக திருமணம் என்பது ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியது அல்ல; நம் பெற்றோரும் அவர்களின் பெற்றோரும் அந்த அடிப்படையில் தானே திருமணம் செய்து கொண்டிருப்பார்கள். திருமணத்திற்கு பின் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது. தங்கள் சாதி சனத்திலிருந்து தங்களுக்கு நிகரான அந்தஸ்தை உடைய சம்பந்தத்தை பெறவே பணத்தை அடிப்படையாக கொண்ட திருமணங்கள் நடை பெறுகின்றன. 
 
 
சமுதாய கோட்பாடுகளை சில நேரம் காதல் திருமணங்கள் உடைத்தெறியும். நீடித்து நிலைத்திட: காதலுக்காக செய்யப்படும் திருமணங்களை விட பணத்திற்காக செய்யப்படும் திருமணம் தான் அதிக நாட்களுக்கு நீடித்து நிற்கும்; கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் அது தான் உண்மை. அதற்கு காரணம் உங்களின் காதலும் ஈர்ப்பும் காலப்போக்கில் மறைந்து விடும். தினசரி பிரச்சனைகள், குடும்ப தேவைகள் மற்றும் வேலை பளு ஆகியவைகள் உங்கள் காதலை தேயச் செய்யும். இதனால் அடிக்கடி சண்டையும் சச்சரவும் உண்டாகும். பணத்திற்காக செய்யப்படும் திருமணத்திலும் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் அழுவதென்று வந்து விட்ட போது ஒரு  காரில் உட்கார்ந்து அழலாமே; எதற்கு சைக்கிளில் உட்கார்ந்து அழ வேண்டும்?

காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி?

ஒவ்வொரு பெண்ணுக்கும் தன காதலன் அல்லது கணவனை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அப்படி தெரிந்து கொள்ளும் போது தான் அந்த உறவில் அவர்களின் நிலை என்னவென்று அவர்களுக்கு புரியும். அல்லது அந்த உறவில் உள்ள அர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் கணவன் அல்லது காதலனை சுலபமாக புரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம். 

ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. அவரை பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள நீங்கள் முற்படும் போது அதனை நீங்கள் மென்மையாக கையாள வேண்டும். பொதுவாக ஆண்கள் தங்களை பற்றிய விஷயங்களை அவ்வளவு சுலபத்தில் திறப்பதில்லை. அவர்களுக்கென ஒரு வேலி போட்டு கொண்டு வாழ்வார்கள். அதனால் அவர்களை பற்றி தெரிந்து கொள்வதில் அதிக சிரத்தை எடுக்க வேண்டி வரும். 

அவரை பற்றி நன்றாக புரிந்து கொள்ள அவரை பற்றிய தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பொறுமையை முக்கிய ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் உறவில் அவரை பற்றி தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளது. அவரை பற்றி நன்றாக தெரிந்து கொள்வதால் சில எதிர்மறையான ஆச்சரியங்கள் வெளிப்படுவதை நீங்கள் தவிர்க்கலாம். ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து கொண்டு புரிந்து வைத்திருந்தால் இருவரின் உறவும் திடமாக இருக்கும். 
 
உங்கள் துணியை புரிந்து கொள்வது என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு செயலாகும். அவருடன் உறவில் இருக்கும் காலம் வரை அது நீடித்துக் கொண்டே இருக்கும். அவருடன் வாழத் தொடங்கி பல வருடம் ஆகியிருந்தாலும் கூட அவரை பற்றி தெரியாத விஷயங்கள் சில இருக்கத் தான் செய்யும். அவர் ரகசியமாக மூடநம்பிக்கையை கடைப்பிடிப்பவராக இருக்கலாம், தனிமையை விரும்பலாம், சோதனையான கடந்த காலத்தை கொண்டிருக்கலாம், செல்லப்பிராணிகள் என்றால் எரிச்சல் அடையலாம் என உதாரணகளை அடுக்கி கொண்டே போகலாம். பல நேரங்களில் கொடுத்தல் வாங்கல் அடிப்படையிலேயே உங்கள் உறவு நகரும். அவரிடம் இருந்து சில விஷயங்களை தெரிந்து கொள்ள உங்கள் வாழ்வில் உள்ள ரகசியங்களை நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டியிருக்கும். 

மெதுவாக ஆரம்பியுங்கள் 
 
உங்கள் உறவு ஆரம்பித்த கால கட்டத்தில் நம்பிக்கையை வலுப்படுத்தி ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் அவரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதை பொறுத்து தான் அவர் உங்கள் கனவு கண்ணனா அல்லது உங்களை பிடிக்க போகும் சனியா என்பதை தீர்மானிக்க முடியும். இருப்பினும் அவரை பற்றி அறிந்து கொள்வதை நீங்கள் துரிதப்படுத்தினால் அதுவே கூட உங்கள் உறவு முடிவதற்கு ஒரு காரணமாக அமையலாம். 
 
கேள்விகள் 
உங்கள் காதலன் உங்களிடம் அந்தரங்கமாக பேச ஆரம்பித்து விட்டால் அவரை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆரம்பியுங்கள். அவர் கூறும் பதிலில் இருந்து அடுத்த கேள்வியை கேட்டு அவரை பற்றி தெரிந்து கொள்ள முற்படுங்கள். அவருக்கு பிடித்த விளையாட்டு குழுவை கேட்டால் அதோடு நிற்காமல் அதில் அவருக்கு பிடித்த விளையாட்டு வீரர் யார் என்பதை கேளுங்கள். அதற்கு வரும் பதிலில் இருந்து அப்படியே அடுத்த கேள்வியை ஆரம்பியுங்கள். இவ்வழியை பின்பற்றி அவரை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளலாம். அவரும் அவருடைய விருப்பு வெறுப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வார். 
 
கொடுத்து வாங்கல் 
 
உங்களுக்கு அவரை பற்றி எந்தளவுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமோ அதே அளவு அவருக்கும் உங்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் அல்லவா? அவரை கேள்விக்கனலால் துளைத்து எடுப்பதற்கு பதிலாக அவர் கூறுவதற்கு பதிலளிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் பேசும் போது மற்றவர் கவனித்தால் மட்டுமே ஒரு நல்ல உரையாடல் நடைபெறும். 

அவரின் நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 
 
அவரின் நண்பர்களுக்கு நீங்களும் நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி அல்லது பெயரளவுக்கு அவர்களை தெரியும் என்றாலும் சரி, அவர்களை சந்தித்து அவர்களை பற்றி தெரிந்து கொண்டால், உங்கள் காதலன் அல்லது கணவனோடு உங்கள் நெருக்கத்தை அதிகரிக்க இது உதவும். தன் காதலனை பற்றி காதலிக்கு தெரியாத பல விஷயங்கள் அவருடைய நண்பர்களுக்கு தெரியக் கூடும். அதனால் அவர்களிடம் இருந்து கூட பல விஷயங்கள் உங்களுக்கு தெரிய வரும். 
 
அவரின் வேலையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 
 
அவரின் வேலையை பற்றியும் வேலையில் அவரின் மனக்கிளர்ச்சி பற்றியும் தெரிந்து கொண்டால் அவரை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ளலாம். அவரின் வேலையை பற்றி பேசத் தொடங்கலாம், அன்றைய பொழுதில் அவரின் வேலை எப்படி இருந்தது போன்றவைகளை பற்றியெல்லாம் பேசலாம். அலுவலக பார்ட்டிகள் அல்லது அலுவலக சந்திப்புகளில் அவருடன் வேலை செய்பவர்களிடமும் பேசும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 
 
நன்றாக காது கொடுத்து கேட்பவராக இருக்க வேண்டும் 
 

அவரை பற்றி தெரிந்து கொள்ள இதை விட எளிய வழி எதுவுமே இல்லை. அவர் பேசும் போதோ அல்லது தன்னுடைய கனவு மற்றும் லட்சியங்களை சொல்லும் போதோ பெயரளவுக்கு கேட்காமால் ஆர்வத்துடன் கவனியுங்கள். அவர் ஏற்கனவே சொன்னதை மீண்டும் கூறினால் அதனை குறைகூறாமல் ஆர்வத்துடன் கேளுங்கள்.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

உங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமா?: 12 ராசிக்கும் ஜோதிட பார்வை!

உங்கள் ராசிக்கு காதல் உறவுகள் எவ் வகையில் அமையும் என்பதை பார்ப்போம்


மேஷம் 
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம் 
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம் 
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம் 
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி 
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம் 
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் 
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு 
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.

மகரம் 
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம் 
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம் 
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.